- Sri Guru Paduka Samajam Trust
ஸ்ரீ குருபாதுகா சமாஜம் அறக்கட்டளையின் செயல்பாடுகள்
An Introduction to the site:
வலைத் தளத்தின் தலையாய நோக்கம்
மஹாப்பெரியவரின் மகிமை, அவர் ஆற்றிய அற்புதங்கள் இவையெல்லாம் இந்த உலகம் அறிந்த செய்திகள். பல அமைப்புக்களும் ஊடகங்களும் அவற்றைப் பற்றி பலவாறு எழுதி வந்திருக்கிறது; இன்னும் எழுதிக் கொண்டு இருக்கிறது. இன்னும் எழுதும். அவருக்கு அவ்வித ஆற்றல் இருக்கிறதென்பதனைத் தனிப்பட்ட முறையில் அவரவர் அனுபவத்தில் உணர்ந்ததாலேயே அவரால் ஈர்க்கப்பட்டு, அவரது அருளுக்கு நம்மை ஏற்றவர்களாக மாற்றிக் கொள்ள முயன்று கொண்டிருக்கிறோம். எனவே அவரின் மகிமைகள், கருணை இவற்றை வியந்து மேலும் பேசிக் கொண்டிருப்பதைவிட, மஹாப்பெரியவரின் அறிவுரைகளை முடிந்தவரை நாமும் கடைபிடித்து, ஜாதி, மத, இன வேறுபாடுகளில்லாமல் இச்சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் கடைபிடிக்க உதவுவதுமே இந்த வலைத்தளத்தின் தலையாய நோக்கமாகும். இதில் ஓரளவாவது சாதிக்க முடிந்தால், அது நமக்கும் நமக்கு உதவும் உடன் நிற்பவர்களுக்கும் அவரவர் எடுத்த பிறப்பிற்கு சிறப்பு சேர்க்கும்.
இறையுணர்வு மிக்க ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்குவதும் அதனைப் பேணிக் காப்பதும் ஸ்ரீ குருபாதுகாசமாஜத்தின் முதற்பணியாகும். இச்சமுதாயம் சிறப்பாக இயங்க வேண்டுமாயின் அதன் உறுப்பினர்கள் ஒருவரையொருவர் நன்கறிந்தவர்களாக பரஸ்பரம் நம்பிக்கை உடையவர்களாக, ஒருவரோடொருவர் ஒத்துப் போகும் மனப்பான்மை உடையவர்களாக இருக்க வேண்டுவது அவசியம். அவர்கள் அடிக்கடி கலந்து பேசிப் பழக வாய்ப்பிருக்க வேண்டும். அதற்கு ஒரு பொதுவான கருப்பொருள் இருக்க வேண்டும். பொதுவான கருப்பொருள் இறையுணர்வு. சமுதாயத்து மக்கள் அடிக்கடி கலந்து பேசிப் பழக வாய்ப்பளிக்கும் களம் ஆலயம். அன்றும் இன்றும் என்றும் இவ்வாலயங்களே சமுதாய வளர்ச்சிக்குச் சிறப்பான பங்கு பணியாற்றி வந்திருக்கிறது. நடேச நகர் அருள்மிகு சிவ – விஷ்ணு ஆலயம் இப்பணியினை சிறப்பாக ஆற்றி வருகிறது
இன்றைய சமுதாயத்தில் அத்தகு இறையுணர்வினை வளர்க்க வேண்டியதன் தேவையினைப் பற்றியும், அதற்கு அந்தந்தப் பகுதியில் வழிபாட்டுச் சங்கங்கள் அமைத்து இறை பக்தியினை வளர்ப்பது பற்றியும், இறை பக்தியினை வளர்ப்பதில் முட்டுக்கட்டையாக இருக்கும் வேற்றுமை (குறிப்பாக சைவ வைணவ பேதம், வடமொழி தென்மொழி பேதம் இவை) மறைய வேண்டியதன் அவசியம் குறித்தும், இந்த இறையுணர்வினை வளர்ப்பதில் மகளிருக்குக் குறிப்பாகத் தாய்மார்களுக்கு பெரும் பொறுப்பும் கடமையும் இருக்கிறதென்பதனையும் காஞ்சி மஹாப் பெரியவர் பல முறை அறிவுறுத்தியிருக்கிறார்.
இந்தியாவின் பல சிறப்புகளில் “வேற்றுமையில் ஒற்றுமை காண்பது” என்பது மிக முக்கியமான ஒரு சிறப்பு. ஒரு பெரிய பொருளின் சிறுமூலக்கூறாக இருந்தாலும், அதற்கும் அப்பொருளின் பண்பேதான் இருக்க முடியும். நடேச நகர் இந்தியாவின் ஒரு சிறு பகுதியாக இருக்க, அதுவும் ஒரு “சிறு இந்தியாவே” என்ற வகையில் இந்தியாவின் பண்புகள்தானே நடேச நகருக்கும் இருக்க முடியும். எனவே வேற்றுமையில் ஒற்றுமை காண்பது இங்கும் சிறப்பு தரும் ஒன்றாகும். எனவே வேற்றுமையில் ஒற்றுமை காண உதவுவதுதான் நடேச நகர் சிவிக் அஸோஸியேன் (மக்கள் நல மன்றம்) முன் நிற்கும் முதற்பணி.
மேற்சொன்ன ஒரு நல்ல நிலைமை அமைய சில வேளைகளில் வெளி அமைப்புக்களான அரசும் அதன் பல்வேறு இயந்திரங்களும் உதவ வேண்டும். அரசின் அனைத்து நிர்வாக அமைப்பிற்கும் இச்சமுதாயத்தின் கருத்துக்களை முறையாக எடுத்துச் சொல்ல அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் ஒரு அமைப்பு தேவை அதனை நகரின் அஸோஸியேஷன் (மக்கள் நல மன்றம்) செய்கிறது.
சமாஜம், ஆலயம் மற்றும் மக்கள் நல மன்றம் ஆகிய இவை மூன்றும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் அடிப்படை நோக்கமான சமுதாய சிறப்பு தானே வரும். இப்பகுதி மக்கள் வாழ்க்கை சிறப்பாக அமையும். எனவே இம்மூன்று அமைப்புக்களும் இந்த நோக்கம் நிறைவேற நகரில் அன்றாடம் என்ன செய்கிறது என்பது அனைத்து மக்களுக்குத் தெரிய வேண்டும். அப்பொழுதுதான் அவர்களின் பங்கேற்பு சிறப்பானதாகத் தன்னார்வமுடையதாக அமையும். அதற்கு இவ்வலைத்தளம் உதவ வேண்டும் என்ற நோக்கத்துடனே இம்மூன்று அமைப்புக்களையும் ஒன்றடக்கிய வகையில் இவ்வலைத்தளம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
சமாஜம், ஆலயம் மற்றும் மக்கள் நல மன்றம் ஆகிய இவை மூன்றும் ஒன்றாக இணைந்து செயல்பட்டு, இப்பகுதி மக்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய என்ன செய்கிறது என்பதனை இங்கிருக்கும் மக்கள் அறிந்தால் மட்டும் போதாது. புலம் பெயர்ந்து வெளிநாடு சென்று வாழ் இந்நகரின் மக்களும் அறிந்தால்தான் அவர்கள் இங்கு திரும்பி வரும் பொழுது ஒரு நல்ல சமுதாயத்தை அடையாளம் காண முடியும். அவர்களும் நிம்மதியாக வாழ முடியும். உலகின் பல்வேறு பகுதிகளிலும் தாற்காலிகமாக வசிப்பவர்களும் இந்த நடேச நகர் பகுதி எவ்வாறு சிறப்பாக முன்னேறி வருகிறது என அறிந்து கொள்ள விஞ்ஞான தொழில் நுட்பத்தின் துணையுடன் வடிவமைத்திருக்கும் சிறப்பான இவ்விணைய தளம் உதவும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் நாம் இன்று இவ்விணையதளம் மூலம் உங்களை அடைய முயற்சிக்கிறோம். இது சாத்தியமாக உதவும் அனைத்து அன்புள்ளங்களுக்கும் எங்களது இனிய மனமார்ந்த நன்றி உரித்தாகுக!!
இதனை மேம்படுத்த உங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களை எங்களுக்கு sriguru09@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.
ஸ்ரீ குருபாதுகா சமாஜம் அறக்கட்டளை. சென்னை 92
இத்தளத்தினைச் சிறப்பாகப் பயன்படுத்த ஒரு வழிகாட்டி
இந்த தளம் HOME SAMAJAM TEMPLE NAGAR MATRIMONIAL ARTICLES CONTACTS என வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. HOME பகுதியில் மற்ற SAMAJAM TEMPLE NAGAR MATRIMONIAL மற்றும் ARTICLES பகுதியில் காணப்படும் செய்திகளைப் பற்றிய ஒரு மேலோட்டமான கண்ணோட்டம் காணலாம். அந்தந்த செய்திகளின் சிறு குறிப்பினை (Link) இரட்டைச் சொடுக்கு (Double Click) செய்வதன் மூலம், அந்தந்த பகுதிக்கு விரைவாகச் சென்று அச்செய்திகளைப் பார்க்க, படிக்க முடியும்.
SAMAJAM, TEMPLE மற்றும் NAGAR பகுதிகளில், அந்தந்த தலைப்பில், அவரவர் பொறுப்பில் என்ன நிகழ்ச்சிகள் அன்றாடம் நடக்கிறது என விவரமான செய்திகள், போட்டோக்கள் முதலானவை மாதாமாதம் வெளியிடப்படும்.
NAGAR பகுதியில் எல்லோரும் அறிந்து கொள்ள ஏதுவாக, நடேச நகர் சிவிக் அஸோஸியேஷன் மூலமாக அறியப்பட்ட இந்த நடேச நகர் பகுதிக்கான (குடிநீர் வடிகால் வாரியம், மின்சார வாரியம், மற்றும் நகராட்சி வெளியிடும்) பொதுவான அறிவிப்புக்களின் பிரதிகள் அவ்வப்பொழுது பதிவிடப்படும்.
MATRIMONIAL பகுதியில், தங்கள் வாரிசுகளுக்கு நல்ல முறையில் தக்க வரன் தேர்ந்தெடுக்க அனைத்து இந்து சமயத்தினருக்கும் உதவும் வகையில், ஸ்ரீ குருபாதுகா சமாஜத்தின் ஆதரவில் நடைபெறும் ஜாதகப் பரிவர்த்தனை மையத்தின் செயல்பாடுகள், பதிவு செய்ய வசதி, பதிவு செய்த ஜாதகங்களைப் பார்க்க, தொடர்பு கொள்ள வேண்டிய விவரங்கள் முதலானவை வெளியிடப்படும். இவை மாதாமாதம் புதுபிக்கப்படும்.
ARTICLES பகுதியில் SAMAJAM TEMPLE NAGAR மற்றும் MATRIMONIAL தொடர்பான அறிஞர்களின் கருத்துக்கள், பொதுவான தலைப்பில் ஏதேனும் கட்டுரைகள், பாடல்கள் மற்றும் கவிதை முதலியன வெளியிடப்படும். ஆங்கிலம் மற்றும் தமிழில் எழுதப்படும் உங்களின் படைப்புக்கள் வரவேற்கப்படுகின்றன. உங்கள் படைப்புக்களை sriguru09@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும். பொதுவாக பிறர் மனதைப் புண்படுத்தாத எந்த ஒரு படைப்பும் அப்படியே வெளியிடப்படுமெனினும், படைப்புக்களை வெளியிடாமலிருக்கவோ, மாற்றவோ சமாஜத்தின் வலைத்தளப் பொறுப்பாளருக்கு உரிமை உண்டு என்பதும் இவற்றில் எல்லாம் வலைத்தளப் பொறுப்பாளரின் தீர்ப்பே முடிவானது என்றும் அறிவிக்கப்படுகிறது.
Feedback என்ற பகுதியில் SAMAJAM TEMPLE NAGAR MATRIMONIAL ARTICLES மற்றும் இவ்வலைத்தளத்தைப் பற்றிய உங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.
SAMAJAM TEMPLE மற்றும் NAGAR இவற்றின் சிறப்பான பணிகளில் பங்கேற்க விரும்புவோர் மற்றும் அவற்றின் உன்னதமான செயல்பாட்டிற்கு உறுதுணையாக நிதியுதவி செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ள உரிய ஏற்ற முகவரியினை CONTACTS பகுதியில் பார்க்கவும்.
SAMAJAM TEMPLE மற்றும் NAGAR இவற்றின் சிறப்பான பணிகளில் பங்கேற்க விரும்புவோர் தங்களைப் பதிவு செய்து கொள்ள வசதியாக, விண்ணப்பப் படிவங்கள் அந்தந்த பக்கங்களில் வெளியிடப்பட்டிருக்கிறது. அதனைப் பூர்த்தி செய்து, இறக்கி (DOWN LOAD செய்து) அச்சிட்டு கையொப்பமிட்ட விண்ணப்பப் படிவங்களை அதனில் குறிப்பிட்ட பதிவு செய்வதற்கான தொகையுடன் அதனதன் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். முகவரி குறித்த விவரங்களை “CONTACTS” பகுதியில் பார்க்கவும். பதிவு செய்த பிறகு, ஒரு வாரத்தில் உங்களுக்கு தபாலிலோ அல்லது மின்னஞ்சல் மூலமோ தெரிவிக்கப்படும்.
ஸ்ரீ குருபாதுகா சமாஜம் அறக்கட்டளை
Plot No 369/2, முதல் பிரதான சாலை, நடேச நகர், விருகம்பக்கம், சென்னை - 600092
Designed and maintained by AKR Consultants


