ஸ்ரீ பார்வதி பரமேஸ்வர திருக்கல்யாணம்
“அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை”என்பதில் குறிக்கப்படும் அறன் எனப்படுவதற்கு, சிறந்த வாழ்க்கை நெறி, ஒழுக்கம், அல்லது “தர்மம்” என்று பெயர். ஒரு ஆணும் ஒரு பெண்ணும் பரஸ்பரம் விருப்பத்தின் பேரில், சமுதாய அங்கீகாரத்துடன் ஒன்றாய் இணைந்து வாழ்வது, இல்லறம் எனப்படும்.அந்த வாழ்க்கையினையும் பிறர் பழிக்க வாய்ப்பில்லாது நடத்த வேண்டும். தங்களது குடும்பம் சார்ந்த கடமைகளைச் செவ்வனே செய்வதுடன், இதர வாழ்க்கை நெறிகளைப் பின்பற்றும் துறவிகளுக்கும் பிரம்மச்சாரிகளுக்கும் அவரவர் கடமையினை ஆற்ற உற்ற துணையாக இருப்பதுடன், வரும் விருந்தினர்களை உபசரிப்பதோடு தங்கள் குலத்தின் மறைந்த மூதாதையர்களையும் மறவாது அவரவர்க்குரிய பித்ருக் கடன்களையும் சரிவரச் செய்வது சிறந்த “தர்மம்” எனக் குறிப்பிடப்படுகிறது. எனவே இல்லறமே நல்லறம் என அறியவும்.
ஆனால் இது மனிதர்களுக்குப் பொருந்தும். அனைத்துலகையும் படைத்துக் காக்கும் ஆண்டவனுக்கும் திருமணம் என்பது சரியா? இந்தக் கேள்வி எல்லோர் மனதிலேயும் இயல்பாக எழக்கூடிய ஒன்றே. இறைவனை நம்பும் ஆத்தீகர்கள் வெளிப்படையாகக் கேட்காவிட்டாலும் இன்றைய இளைய தலைமுறைக்குப் தெளிவு பெறவாவது இக்கேள்விக்குப் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். மனிதனுக்கு விவாஹம் ஏன் என்ற கேள்விக்கு மஹாப் பெரியவாள் கீழ்க்கண்டபடி பதிலளிக்கிறார்
“விவாஹம் சஹதர்மசரிணீ ஸம்பிரயோகம்” என்று சொல்லப்படும். (பிரம்மச்சார்யத்தில்) வேதத்தை கிரஹித்தாயிற்று. அதற்கப்புறம் எந்த ஒரு காரியமும் செய்ய வேண்டும் என்றாலும் அதற்கு ஒரு துணை வேண்டும்.பிரிக்க முடியாத ஒரு சொத்தாக இருக்க வேண்டும். உசிதமான ஒருவரை சேர்த்துக் கொள்ள வேண்டும். சேர்த்து தர்மானுஷ்டானம் பண்ணுகிறவர்களுடைய சேர்க்கை வேண்டும். பிரம்மச்சார்யம், சந்நியாஸம் என்னும் இரண்டிலும் செய்யும் கர்ம பலன்கள் புருஷனின் சொத்து. கிருஹ்யதர்மம் பொது சொத்து. பதியும் பத்தினியும் சேர்ந்து பொது சொத்தான கிருஹ்யதர்மத்தை அனுசரிக்க வேண்டும். இந்த நோக்கம் சரிவர நிறைவேற உதவ, நல்ல இல்லறம் அமைய வேண்டும்”.
இன்றைய அளவு பிரசார சாதனங்களோ, வசதிகளோ, ஒரு பொது இடமோ இல்லாத அந்தக் காலத்தில் வாழ்க்கையின் அடிப்படை அறிவுக்கான அனைத்து விஷயங்களும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆலயத்தில் நடைபெறும் விழாக்கள், அமைக்கப்படும் சிலைகள், வரையப்படும் ஓவியங்கள் இவற்றின் மூலமாகவே பொது மக்களுக்கு உணர்த்தப்பட்டு வந்தது. கஜுராஹோ சிற்பங்களும் கூட மனித வாழ்வின் ஒரு சிறப்பான நிகழ்விற்கான இவ்வகையான பிரசாரக் கருவிகளே.
இந்த விவாஹம் அல்லது திருமணம் இல்வாழ்க்கையினை ஏற்கும் ஒரு ஆணும் பெண்ணும் பரஸ்பரம் தங்களுக்குள் ஒரு ஒப்பந்தத்தைப் பலரறிய ஏற்படுத்திக் கொண்டு அதன் படி வாழ வேண்டும். இந்த விவாஹம் அல்லது திருமணத்தில் இதனைக் குறிக்கப் பல சடங்குகள் சம்பிரதாயங்கள் உண்டு. கன்னிகா தானம், மாங்கல்ய தாரணம், பாணிக்கிரகணம், சபதபதி, லஜ்ஜ ஹோமம், மற்றும் சேஷ ஹோமம் எனப் பல. இவற்றில் ஆண் பெண்ணிடம் செய்யும் சத்தியப் பிரமாணம் “சப்தபதி” என்பதிலிருந்து பெண் தன் கணவன் மற்றும் அவனது குடும்பத்தைத் தன் குடும்பமாக ஏற்றுக் கொள்வதனைக் குறிக்க, வேண்டிக் கொள்ளும் “லஜ்ஜ ஹோமம்” வரை சடங்குகள் மிகச் சிறப்பான ஒன்றாகும். இவற்றைப் பற்றி அனைத்து மக்களும் அறிந்து கொள்ள ஆலயங்களில் நடக்கும் இறைவன் மற்றும் இறைவியர் திருமணம் உதவியது என்பதில் எந்த வித சந்தேகமும் தேவையில்லை.
கால ஓட்டத்தில் இதன் சிறப்பான பொருள் (தாத்பர்யம்) தெரியாத காரணத்தால் பல சடங்குகள் விட்டுப் போயின அல்லது பொருள் தெரியாமல் மூடத்தனமாக கடைபிடிக்கப்பட்டு வந்திருக்கின்றன. ஒவ்வொரு வர்ணத்தவரும் அவரவர் அறிந்த வகையில் திருமணங்களை நடத்துகின்றனர். இன்றும் கூட பல இந்து விவாஹங்களில், மணமகன் தான் செய்யும் சடங்குகளின் பொருள் தெரியாமலும், மந்திரங்களைச் சரியாக உச்சரிக்காமலும் (பெரும்பாலான விவாஹங்களில், புரோகிதர்தான் மந்திரங்களைச் சொல்கிறார்) மணமகனும், மணமகளும் நண்பர்களையும் உறவினர்களையும் வரவேற்று கைகுலுக்குவதிலேதான் கவனம் செலுத்துகிறார்கள் என்பது வேதனைக்குரிய செய்தி. பல விவாஹங்கள் ஆடம்பரத்திற்காகவே பலரறிய நடத்தப்படுகிறது.
இது தவிர்க்கப்பட வேண்டும் நமது விவாஹச் சடங்குகளின் உயர்ந்த நோக்கத்தை அனைவரும், குறிப்பாக இளைய சமுதாயம் அறிந்து கொள்ள வேண்டும் என்ற காரணத்தாலேயே ஸ்ரீ தர்மசம்வர்தனி ( அருள்மிகு அறம் வளர்த்த நாயகி) மற்றும் ஸ்ரீ ராமநாதேஸ்வர ஸ்வாமிக்கும் இக்கல்யாண வைபவம் இன்று சென்னை நடேச நகரில் உள்ள ஸ்ரீ சிவ விஷ்ணு ஆலயத்தில் நடத்தப்பெற்றது. அதன் தொடர்பான பல புகைப்படங்கள் தொகுப்பு இங்கு வெளியிடப்படுகிறது.
ஸ்ரீ பார்வதி பரமேஸ்வர திருக்கல்யாணம்
ஜெய ஜெய சங்கரா!! ஹர ஹர சங்கரா!!
ஸ்ரீ குருபாதுகா சமாஜம் அறக்கட்டளை
Plot No 369/2, முதல் பிரதான சாலை, நடேச நகர், விருகம்பக்கம், சென்னை - 600092
Designed and maintained by AKR Consultants


